Vikatan

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி

News

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை

ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார்.

தேன் கூட்டில் எல்லாப் பக்கமும் இனிப்புதான் என்பதைப்போல, அம்பிகையை எந்த வடிவில் வணங்கினாலும் பலன்கள் அநேகம் என்கின்றன ஞான நூல்கள். குறிப்பாக அம்பிகையைச் சின்னஞ் சிறு பெண் வடிவில் ஸ்ரீபாலா என்றும், வாலாம்பிகை என்றும் வழிபடுவோருக்கு அச்சமும் அஞ்ஞானமும் இல்லாமல்போகும் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள். அறியாமையாலும் அச்சத்தாலும் பொருள்களை – செல்வத்தை இழந்தவர்கள், அதன் பொருட்டு பாலாம்பிகையை வணங்கினால் நிச்சயம் இழந்தவற்றை மீண்டும் அடைவார்கள். பொன் – பொருள் மட்டுமல்ல, பிரிந்த உறவுகளை மீண்டும் அடையவும் பாலாம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றன ஞான நூல்கள்.

சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடை உடுத்தி ஸ்ரீபாலாம்பிகை அருள்பாலிக்கும் ஆலயங்கள் வெகு சிலவே தமிழகத்தில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை ஆலயம்.

ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை எனும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் ஸ்ரீபாலாம்பிகை. இவளே ஸ்ரீலலிதாம்பிகையிடம் கவசமும் ஆயுதங்களும் பெற்று, அன்னங்கள் பூட்டிய தேரில் சென்று பண்டாசுரனையும் அவனுடைய முப்பது பிள்ளைகளையும் சம்ஹாரம் செய்தாள். இதனால் தைரியம் மற்றும் வீரத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறாள் இந்த அம்பிகை.

சித்தர்களுக்குத் தலைவியாகவும் அவர்களுக்குச் சகல ஸித்திகளையும் அருளும் பெருந்தேவியாகவும் விளங்குகிறாள். ஸ்ரீவாலையை ருத்திரன், விஷ்ணு, பிரம்மன் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீவாலை வழிபாட்டை நந்தீசரிடம் இருந்து போகர் அறிந்ததாகவும், போகர் கொங்கணருக்கு உபதேசித்ததாகவும், கொங்கணர் பிற்கால சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை

பாலா என்று வடமொழியிலும் வாலை என்று தமிழிலும் போற்றப்படும் இந்த அன்னையை முதல் தெய்வமாக வழிபட்டு, ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற வாலாம்பிகை மந்திரம் கொண்டு அஷ்டமா ஸித்திகளையும் அடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது பாலா மந்திரம் என்கிறது சித்தர்கள் சுவடி. திருமூலரும், கருவூராரும், அபிராமிப் பட்டரும் இந்த அன்னையின் பெருமையைப் பலவாறு புகழ்ந்துள்ளனர்.

குபேரனின் தவற்றை உணர்த்தி, அவனைக் காவிரிப் பூம்பட்டினத்தில், திருவெண்காடருக்கு (பட்டினத்தார்) மகனாக மருதவாணனாகப் பிறக்கவைத்தவள் ஸ்ரீவாலை என்கின்றன புராணங்கள். குமரகுருபரருக்கு ஸ்ரீபாலா எனும் குழந்தை வடிவில் மீனாட்சி காட்சி தந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைக் கேட்டு மகிழ்ந்து, முத்து மாலையைப் பரிசளித்த திருக்கதையும் உண்டு.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு’ என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தின் சாநித்யம் அறிந்து, இங்கேயே ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்துத் தவம் இயற்றி, ஸித்திகள் பெற்றார். ஸ்ரீபாலாவின் அருளால் அவளைக் கனவில் கண்டு பலரின் குறைகளைத் தீர்த்தார். பிறகு இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர். அவர்களுக்கு அருள் செய்த அன்னை பாலா இங்கேயே அமர்ந்தும்விட்டாள்.

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை கோயில்

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை கோயில்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கொம்மடிக்கோட்டையே ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற பெயரில் சிறப்புற்று விளங்குகிறது.

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஒரே சந்நிதியில் வாலை சித்தரும், காசியானந்தரும் அடுத்தடுத்து அருள்கின்றனர். இங்குள்ள ஸ்ரீவாலைசித்தர், ஸ்ரீகாசியானந்தர் இருவரையும் வணங்கியபின்னரே, ஸ்ரீவாலையை வழிபட வேண்டும் என்பது மரபு. வாலை சாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்தியெம்பெருமான் காட்சியளிக்கிறார். சித்தர்கள் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. சக்தியின் உயர்ந்த நிலை மனோன்மணி. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் மனோன்மணி. மனதில் மணியாக ஒளிர்பவள். ஆலயத்தின் பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும், சண்டிகேஸ்வரரும், நடராஜர்–சிவகாமி சந்நிதியும் உள்ளன.

ஸ்ரீவாலாம்பிகை சந்நிதி தனி விமானத்துடன் அமைந்துள்ளது. பட்டுப்பாவாடை, சட்டை யுடன், சர்வ அலங்காரங்களுடன், நின்ற கோலத்தில் ஜொலிஜொலிக்க அருள்பாலிக் கிறாள் ஸ்ரீபாலா. `இந்த அன்னையை வணங்கினால் சகல யோகங்களையும் போகங் களையும் அருள்வாள். ஒரு கணம் அவளை எண்ணி வணங்க, கனவில் வந்து கரம் கொடுப்பாள்’ என்கின்றன சாஸ்திரங்கள்.

குறிப்பாக பக்தர்களாகிய நாம்… பொன், பொருள், உறவுகள், தேகநலன் இவற்றின் பொருட்டு மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பில் இருந்து நம்மை மீட்பவள் ஸ்ரீபாலா. அத்துடன் நாம் இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை.

ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார்.

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை கோயில்

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை கோயில்

திருமாத்திரை மகிமைகள்!

இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக – புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம்.

பிரசித்த பெற்ற இந்த ஆலயம் காலை 6:30 முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 முதல் 8:30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?

திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை கோயில் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி திருக்கோயில்.

ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். ஸ்ரீவாலையை வணங்கி நிற்க அட்டமா ஸித்திகளும் கூடி வரும். நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள்!

Author